பொருளாதாரரீதியான வாழ்க்கைக்கு அவசியமான மொழிகள், கலைகள், அறிவியல் மற்றும் வரலாறு பாடங்களை பயிலும் நம் குழந்தைகள், முதன்மை நோக்கமான “எப்படி வாழ வேண்டும்” என்பதை கற்றுக்கொண்டார்களா / கற்றுக்கொள்கிறார்களா எனும் பிரதானமான கேள்வி முன்னெழுகிறது. பொதுவாக, பெற்றோர்களும் சமூகமும் குழந்தைகளின் மனதில் உலகம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது என்ற எண்ணங்களை உண்டாக்குகிறார்கள், எனவே அவர்கள் வெற்றியாளர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்ற ஒற்றை எண்ணத்துடன் பந்தய-குதிரைகளாக வளர்க்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பை முடித்து, திறன்களைக் கற்றுக் கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று நியாயமாக எதிர்பார்க்கலாம் என்றாலும், இதை எவ்வாறு இயற்கைத்தன்மையுடனும், மனிதத்தன்மையுடனும் செய்வது என்று குழந்தைகள் கற்றுக்கொள்வது அவசியமாகும். இந்த வேகமான கணினிமயமான உலகில், பெற்றோர்களாகிய நாம், குழந்தைகளின் மனதில் எவ்வாறு தம்மைத்தாமே கண்ணியத்துடன் நடத்த வேண்டும், சுய மற்றும் சமூக வாழ்க்கையைப் பற்றிய நனவு, இயற்கையோடு இயைந்து வாழ்தல் போன்ற அடிப்படை விடயங்களை அவர்கள் மனதில் சரியாகவும் நேர்மையாகவும் விதைக்கின்றோமா எனும் வினாக்களை நாம் நமக்குள் எழுப்ப வேண்டும். குழந்தைகள் தேசத்தின் வளர்ந்து வரும் தூண்கள் ஆவர், எதிர்காலத்தில் அவர்கள் எல்லா முனைகளிலும் நாட்டை ஆளப் போகிறார்கள். இயற்கையிடமிருந்தும், வாழ்க்கையிலும் கற்றுக்கொள்வதற்கு பல விடயங்கள் உள்ளன என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குவதும் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் ஆற்றலையும் மேம்படுத்துவதும் அவர்களின் வளர்ந்து வரும் ஆண்டுகளில் ஒரு முக்கிய அம்சமாகும். சரியான உள்ளீடுகளுடன் ஒரு முற்போக்கான சிந்தனை செயல்முறையைத் தூண்டுவதற்கான ஒரு சிறிய முன்முயற்சியாகும். இது அவர்களின் வாழ்க்கையை ஒரு பரந்த அளவிலான பார்வையில் காணவும், அவதானிக்கவும், தம்மை வழிநடத்தவும், நன்கு சீரான, மரியாதைக்குரிய மற்றும் இணக்கமான வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு பொறுப்புள்ள நபராக அவர்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.